இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 

அடுத்ததாக ஒருநாள் தொடரும் கடைசியாக டெஸ்ட் தொடரும் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடைசி டி20 போட்டியில் காலில் காயமடைந்த ரோஹித் சர்மா, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகியதால், ஒருநாள் அணியில் அவருக்கு மாற்று வீரராக மயன்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் பிரித்வி ஷா இடம்பெற்றுள்ளார். ரோஹித் சர்மா காயத்தால் வெளியேறியதால், டெஸ்ட் அணியில் பிரித்வி ஷாவிற்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. 

2018ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிரித்வி ஷா, காயம் காரணமாக அந்த தொடரில் ஆடமுடியாமல் விலகினார். அதன்பின்னர் பிரித்வி ஷா டெஸ்ட் அணியில் இடம்பெறவேயில்லை. இந்நிலையில், ரோஹித் விலகியதால் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் நவ்தீப் சைனி முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். மற்ற அனைவரும் வழக்கமாக டெஸ்ட் ஆடும் வீரர்கள் தான். இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஆட முடியும். 

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி(கேப்டன்), மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா.