ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாகவும், அவர், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பராக ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம் என்று பிசிசிஐ அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தீவிர சிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட 14 மாதங்கள் ஓய்வில் இருந்தார். கார் விபத்திற்கு பிறகு எந்த தொடரிலும் ரிஷப் பண்ட் பங்கேற்கவில்லை. அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் இருந்தார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ரிஷப் பண்ட் குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் உடல் தகுதியை அறிவிப்போம். டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடினால், அது பெரிய விஷயமாக இருக்கும். இந்திய அணியின் சொத்து ரிஷப் பண்ட்.
அவர், நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார். இதனால், அவர் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை உற்று நோக்குவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளதது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு என்சிஏவில் தீவிர பயிற்சிக்கு பிறகு பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதலால், வரும் ஐபிஎல் 2024 தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பங்கிறாரா? அல்லது இம்பேக்ட் பிளேயராக விளையாடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
