இந்திய அணி 2026 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அண்மை காலமாக சிறுபான்மையினராக இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுவது மட்டுமின்றி, இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு இந்திய அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதால் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த ஒரு வங்கதேச வீரரும் விளையாடக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எழுந்த எதிர்ப்பு
இதனால் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை உடனே அணியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக, சிவசேனா கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேசத்துரோகி என்று கூறியுள்ள பாஜக தலைவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக முஸ்தாபிசூர் இந்தியா வந்தால் அவர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கதேசம் கிரிக்கெட் வாரிய அட்டவணை
இந்த நிலையியில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் இந்திய அணி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) 2026-ம் ஆண்டுக்கான தங்களது உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.
வங்கதேசம் நடத்தும் தொடர்
இந்த அட்டவணையின்படி, இந்திய அணி 2026 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 2026 உள்நாட்டு சீசனில், வங்கதேசம் நான்கு டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளை நடத்தவுள்ளது. இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை வங்கதேசம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தான் இறுதி முடிவு எடுக்கும்
இந்தியாவின் வங்கதேச சுற்றுப்பயணம் முதலில் ஆகஸ்ட் 2025-ல் திட்டமிடப்பட்டிருந்தது. இது செப்டம்பர் 2026-க்கு மாற்றியமைக்கப்பட்டது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இடையேயான பரஸ்பர உடன்பாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. இது வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அட்டவணை தான். ஆகவே இந்திய அணி வங்கதேசம் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதை பிசிசிஐ தான் இறுதி முடிவு எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

