இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கெரியர் முடிந்துவிட்டது. தோனிக்கு அடுத்து இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. 

ஐபிஎல்லில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட பின்னர், சரியாக ஆடவில்லை. விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சொதப்புகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆடிய டி20 தொடர் வரை தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலுமே சொதப்பினார். 

விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே ஏமாற்றமளிப்பதால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன. ஆனாலும் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் அளித்துவருகின்றன. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து, அவரது திறமையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் விதமாக, தனது பேட்டிங் ஆர்டரில் அவரை இறக்கிவிட்டார் கேப்டன் கோலி. ஆனால் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றத்தவறிய ரிஷப் பண்ட், டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

விக்கெட் கீப்பிங்கிலும் மோசமான டெக்னிக்கின் காரணமாக படுமோசமாக சொதப்புகிறார். ஆனாலும் அவர் மீதான நம்பிக்கையை இழக்காமல் அணி நிர்வாகம் இன்னும் வாய்ப்புகள் வழங்கிவருகின்றன. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று ஆடும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். 

ரிஷப் பண்ட்டுக்கு தொடர் வாய்ப்புகள் அளிப்பது குறித்து பேசிய விக்ரம் ரத்தோர், ரிஷப் பண்ட் மிகச்சிறந்த திறமைசாலி. அவர் இந்திய அணியின் மாபெரும் சக்தியாக திகழ்வார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையிருப்பதால் தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் அவர் சிறந்த வீரர் என்று நம்புகிறது. அவர் ஃபார்முக்கு திரும்பி ஒரு முறை நல்ல ஸ்கோர் செய்துவிட்டார் என்றால், அதன்பின்னர் மாபெரும் வீரராக உருவெடுப்பார். எனவே தான் அவரது அந்த ஒரு சிறந்த இன்னிங்ஸிற்காக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

இதே கருத்தைத்தான் ஏற்கனவே கேப்டன் கோலியும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.