உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, ஷாகிப் அல் ஹாசன் - முஷ்ஃபிகுர் ரஹீம் அனுபவ ஜோடியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர மஹ்மதுல்லாவின் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 330 ரன்களை குவித்தது. 

331 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கலாம். டுபிளெசிஸ், மார்க்ரம், மில்லர், வாண்டெர் டசன் ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஆனால் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் பெவிலியன் திரும்பிவிட்டனர். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையாததால், தென்னாப்பிரிக்கா தோற்க நேரிட்டது. 

ஆனால் இந்த போட்டியில் இரு அணிகளுமே சிறப்பாக ஆடிய நிலையில், வங்கதேச அணியின் இன்னிங்ஸில் கடைசி 4 ஓவர்கள் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்துவிட்டது. ஷாகிப் அல் ஹாசன் - முஷ்ஃபிகுர் ரஹீம் ஜோடி பிரிந்தவுடன் வங்கதேச அணியின் பேட்டிங்கில் சிறிது தொய்வு ஏற்பட்டது. 

46 ஓவர் முடிவில் வங்கதேச அணி 276 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 4 ஓவர்கள் தான் வங்கதேச அணிக்கு அருமையாகவும் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய தருணமாகவும் மாறிவிட்டது. கடைசி 4 ஓவர்களில் மஹ்மதுல்லாவின் அதிரடியால் வங்கதேச அணிக்கு 54 ரன்கள் கிடைத்தது. 47வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் எடுக்கப்பட்டது. 

48வது ஓவரில் 11 ரன்களும் 49 மற்றும் 50 ஆகிய இரண்டு ஓவர்களிலும் தலா 14 ரன்களும் எடுக்கப்பட்டன. கடைசி 4 ஓவர்களில் மஹ்மதுல்லா பவுண்டரி மழை பொழிந்துவிட்டார். அவர் பவுண்டரிகளை அடித்து குவித்ததால்தான் வங்கதேச அணியின் ஸ்கோர் 330 ரன்கள் ஆனது. இல்லையெனில் 305-315 ரன்களுக்கு உள்ளாகத்தான் இருந்திருக்கும். 

கடைசி 4 ஓவர்கள் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணியும் 46 ஓவர் முடிவில் வங்கதேசம் எடுத்திருந்த அதே 276 ரன்களைத்தான் எடுத்திருந்தது. ஆனால் இலக்கை விரட்ட வேண்டும் என்ற நெருக்கடி இருந்ததால் அந்த அணியால் கடைசி 4 ஓவர்களில் வங்கதேசத்தை போல, துணிச்சலுடன் ஆடமுடியவில்லை. மேலும் தென்னாப்பிரிக்க அணியிடம் டுமினியின் விக்கெட்டுக்கு பிறகு பேட்ஸ்மேனும் இல்லை.