உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, ஷாகிப் அல் ஹாசன் - முஷ்ஃபிகுர் ரஹீம் அனுபவ ஜோடியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர மஹ்மதுல்லாவின் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 330 ரன்களை குவித்தது. 

331 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, வெற்றியுடன் உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ளது. 

இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்க அணியின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது வங்கதேச அணி. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியின் கேப்டனாக ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் மோர்டஸா. 

உலக கோப்பை தொடரில் மோர்டஸாவின் கேப்டன்சியில், வங்கதேச அணிக்கு இது நான்காவது வெற்றி. உலக கோப்பையில் மோர்டஸாவின் கேப்டன்சியில் 6 போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேச அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது. இதுதான் உலக கோப்பை தொடரில் ஒரு கேப்டனின் கீழ் வங்கதேச அணி பெற்றிருக்கும் அதிகமான வெற்றிகள். இதற்கு முன்னதாக ஷாகிப் அல் ஹாசன் உலக கோப்பையில் 7 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 3ல் வெற்றி பெற்று கொடுத்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதை முறியடித்து வங்கதேச அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் மோர்டஸா.