ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் போட்டி நடந்தது. 

தாக்காவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் க்ரைக் எர்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். தொடக்க வீரர் பிரின்ஸ் அரைசதம் அடித்தார். பிரின்ஸ் 64 ரன்களிலும் கேப்டன் எர்வின் 107 ரன்களிலும் ஆட்டமிழக்க, அவர்களைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சைஃப் ஹசன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணியின் சீனியர் வீரருமான தமீம் இக்பால் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நஜ்முல் ஹுசைன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 71 ரன்களில் அவுட்டானார். 

நஜ்முல் ஹுசைனும் கேப்டன் மோமினுல் ஹக்கும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். கேப்டன் ஹக் சிறப்பாக ஆடி சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். நஜ்முல் ஹுசைன் 71 ரன்களில் அவுட்டான கொஞ்ச நேரத்திலேயே கேப்டன் ஹக் 132 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம், மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அபாரமாக ஆடி சதமடித்த அவர், சதத்திற்கு பின்னரும் அருமையாக ஆடினார். அவருக்கு லிட்டன் தாஸும் ஒத்துழைப்பு கொடுத்து ஆடி அரைசதமடித்தார். சிறப்பாக ஆடிய ரஹீம் இரட்டை சதம் விளாசினார். அவர் இரட்டை சதமடித்ததும் முதல் இன்னிங்ஸை 560 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது வங்கதேச அணி. 

295 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் நயீம் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். நயீம் 5 விக்கெட்டுகளையும் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது. இரட்டை சதமடித்த முஷ்ஃபிகுர் ரஹீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.