Asianet News TamilAsianet News Tamil

தென்னாப்பிரிக்க அணியை தெறிக்கவிட்டு வங்கதேசம் அபார வெற்றி!!

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது.
 

bangladesh beat south africa by 21 runs
Author
England, First Published Jun 2, 2019, 11:21 PM IST

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பாலும் சௌமியா சர்க்காரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிதானமாக ஆடிய இக்பால் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசி ரன்களை வேகமாக உயர்த்திய சர்க்கார் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹாசன் மற்றும் முஸ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பவுலர்கள் திணறினர். இருவருமே அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை இம்ரான் தாஹிர் பிரித்தார்.

ஷாகிப் அல் ஹாசனை 75 ரன்களில் இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். அதன்பின்னர் மிதுன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹீமும் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ரன்ரேட்டை குறைந்துவிடாமல் மஹ்மதுல்லா பார்த்துக்கொண்டார். கடைசி ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி, 330 ரன்களை குவித்தது. 

331 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மார்க்ரமும் டுபிளெசிஸும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஆனால் பார்ட்னர்ஷிப் நிலைக்கவில்லை. மார்க்ரம் 45 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கேப்டன் டுபிளெசிஸ் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். 

டேவிட் மில்லர், வாண்டெர் டசன் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. மில்லர் 38 ரன்களிலும் வாண்டெர் டசன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ரன்ரேட் நன்றாக இருந்தாலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஃபெலுக்வாயோ 8 ரன்களிலும் கிறிஸ் மோரிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, டுமினிக்கு நெருக்கடி அதிகரித்தது. கடைசி 4 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி டுமினியை மட்டுமே நம்பியிருந்த நிலையில், அவரும் கடைசி கட்டத்தில் அடித்து ஆட முயன்றார். ஆனாலும் முஸ்தாஃபிஸுரின் ஸ்லோ டெலிவரியில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்ட, அதன்பின்னர் வங்கதேசத்தின் வெற்றி உறுதியானது.

50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 309 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios