Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: கடைசி வரை போராடிய கில், அக்‌ஷர் படேல்: தன்ஷிம், முஸ்தஃபிஹூர் வேகத்தில் இந்தியா ஆல் அவுட்!

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Bangladesh Beat India by 6 Runs Difference in Super 4 Match Asia Cup 2023 at Colombo rsk
Author
First Published Sep 15, 2023, 11:43 PM IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷாகில் அல் ஹசன் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தவ்ஹீத் ஹிரிடோய் 54 ரன்களும், நசும் அகமது 44 ரன்களும் சேர்த்தனர்.

BAN vs IND, Shubman Gill: விராட் கோலியின் சதம் சாதனையை முறியடித்த இளவரசன் சுப்மன் கில்!

பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும், பிரஷித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 266 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் ஆடியது.

இதில், ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 14ஆவது முறையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒருபுறம் சுப்மன் கில் மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்க்க, மறுபுறம் வந்த வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

IND vs BAN போட்டியில் கையில் கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொண்டு வேடிக்கையாக ஓடி வந்த கோலி; வைரலாகும் வீடியோ!

தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமான திலக் வர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் ஆட்டமிழக்கவே, ரவிந்திர ஜடேஜா 7 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அக்‌ஷர் படேல் களமிறங்கினர். இந்த நிலையில், தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய சுப்மன் 9 ஆவது அரைசதம் அடித்த நிலையில், அதனை சதமாகவும் மாற்றினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு இந்த ஆண்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Bangladesh vs India: ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை!

மேலும், 2023ல் அதிக முறை சதம் அடித்த விராட் கோலியின் 5 சதங்கள் (22 இன்னிங்ஸ்) சாதனையை சுப்மன் கில் இந்தப் போட்டியில் 6ஆவது சதம் (36 இன்னிங்ஸ்) அடித்ததன் மூலமாக முறியடித்துள்ளார். இவ்வளவு ஏன், இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (5 போட்டிகளில் 275 ரன்கள்) குவித்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 5 போட்டிகளில் 253 ரன்கள் குவித்து 2ஆவது இடத்தில் உள்ளார். சதீர சமரவிக்ரமா 215 ரன்கள் உடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

ஒரு கட்டத்தில் கில் 121 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 209 ரன்கள் எடுத்திருந்தது. இவரைத் தொடர்ந்து  தாக்கூர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை போராடிய அக்‌ஷர் படேல் வெற்றி பெற்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். கடைசியாக 6 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், ஷமியும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

BAN vs IND: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டிய ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய்; வங்கதேச 265 ரன்கள் குவிப்பு!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றில் வெற்றியோடு வெளியேறியுள்ளது. அதுமட்டுமின்றி, கடைசியாக இந்தியாவிற்கு எதிராக விளையாடிய 4 ஒரு நாள் போட்டிகளில் வங்கதேச அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 13 போட்டிகளில் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios