Asianet News TamilAsianet News Tamil

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 207 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அக்ஸர் படேல் அபாரமாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 65 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

axar patel 20 balls fifty does not help india to beat sri lanka in second t20
Author
First Published Jan 5, 2023, 10:54 PM IST

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் விலகிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதியும், ஹர்ஷல் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் களமிறங்கினர்.

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸும் பதும் நிசாங்காவும் இணைந்து அதிரடியாக பேட்டிங் 8.2 ஓவரில் 80 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிசாங்கா 33 ரன்களுக்கு அக்ஸர் படேலின் பந்தில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், 52 ரன்களுக்கு சாஹலின் சுழலில் வீழ்ந்தார். பானுகா ராஜபக்சா 2 ரன்னுக்கு உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழந்தார். மிடில் ஓவர்களில் இந்திய அணி இலங்கையின் ஸ்கோரை கட்டுப்படுத்தியது.

அதிரடியாக ஆடி 19 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்த சாரித் அசலங்காவை உம்ரான் மாலிக் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார். தனஞ்செயா டி சில்வா 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 16 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது இலங்கை அணி. அதன்பின்னர் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா, உம்ரான் மாலிக் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள், அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர், கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் என 22 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசினார் தசுன் ஷனாகா. அவரது காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது  இலங்கை அணி.

இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஹாட்ரிக் நோ - பால் வீசிய அர்ஷ்தீப் சிங், 19வது ஓவரில் 2 நோ - பால் வீசினார். 2 ஓவர் மட்டுமே வீசிய அர்ஷ்தீப் சிங், 5 நோ - பால்களை வீசி மோசமான சாதனையை படைத்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய நோ-பால்களால் தான் இலங்கையின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. 

207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, இஷான் கிஷன் (2), ஷுப்மன் கில்(5), ராகுல் திரிபாதி(5), ஹர்திக் பாண்டியா (12), தீபக் ஹூடா(9) ஆகிய 5 வீரர்களும் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழக்க, 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் அக்ஸர் படேலும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 42 பந்தில் 90 ரன்களை குவித்தனர்.  அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்த அக்ஸர் படேலுடன் இணைந்து ஷிவம் மாவியும் அடித்து ஆடினார்.

PAK vs NZ: ODI தொடருக்கான பாக்.,அணி அறிவிப்பு..! ஒதுக்கப்பட்ட வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அஃப்ரிடி அதகளம்

ஷிவம் மாவி 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். அதிரடியாக பேட்டிங் ஆடி கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல், 31 பந்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 65 ரன்களை குவித்து கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்கள் மட்டுமே அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 1-1 என  டி20 தொடரை சமன் செய்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios