உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரின் தடையும் முடிந்து தற்போது ஐபிஎல்லில் அவர்கள் ஆடிவரும் நிலையில், அவர்கள் இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறுவது கண்டிப்பாக தெரிந்த விஷயம் தான். அவர்கள் இருவரும் இணைந்ததால், அண்மைக்காலமாக ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிவந்த ஹேண்ட்ஸ்கம்ப், ஆஷ்டன் டர்னர் ஆகிய இருவரும் வேறு வழியில்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஜோஸ் ஹேசில்வுட்டும் உலக கோப்பை அணியில் இல்லை. ஃபின்ச் தலைமையிலான அணியில் உஸ்மான் கவாஜா, இளம் வீரர் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்ஸன், பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் குல்ட்டர்நைல், ஆடம் ஸாம்பா, நாதன் லயன்.