இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை 2-0 என வென்றது. இந்திய மண்ணில் முதன்முறையாக டி20 தொடரை வென்று ஆஸ்திரேலிய அணி அசத்தியது. அதுவும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. 

டி20 தொடரை அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. டி20 தொடரில் வெற்றி பெற்றது, அந்த அணிக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. 

அதேவேளையில் வலுவாக இருக்கும் இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் ரோஹித், தவான், ராகுல், கோலி என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளதோடு, பும்ரா, ஷமி, குல்தீப் என பவுலிங்கும் மிரட்டலாக உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், அனைத்து அணிகளின் அனைத்து பவுலர்களும் கோலியை வீழ்த்த பல வியூகங்களை வகுக்கின்றனர். அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் கோலி தான். அவரது சாதனைகளே இதை பறைசாற்றும். அவரது சாதனைகளும் நம்பர்களும் மிரட்டலானவை. அவரை விரைவிலேயே வீழ்த்த முனைய வேண்டும். இல்லையேல் போட்டி முழுதும் ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை எதிரணியிடமிருந்து எடுத்து சென்றுவிடுவார். தொடக்கத்திலேயே அவரை வீழ்த்தவில்லை என்றால், பிறகு அவரது விக்கெட்டை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. கடந்த காலத்தில் விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அதைவிட அதிகமாக அவர் நம்மை வைத்து செய்திருக்கிறார் என்று கோலியை வியந்து புகழ்ந்துள்ளார் ஆரோன் ஃபின்ச். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, போட்டிக்கு போட்டி புதிய மைல்கற்களை எட்டிவருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, இந்த காலத்தில் மட்டுமல்லாது, அனைத்து காலத்துக்குமான சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.