இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி, முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே அடித்தது. 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி 2வது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

407 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, கடைசி நாள் ஆட்ட முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் அடித்திருந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. கடைசி நாள் ஆட்டத்தில், ஆஸி., அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியது. கடைசி நாளில் 90 ஓவர்கள் வீசி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸி., பவுலர்களால் வீழ்த்த முடிந்தது. அதுவும் ரஹானேவின் விக்கெட்டை கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதுமே வீழ்த்திவிட்டனர். அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகிய இருவரை மட்டுமே ஆஸி., பவுலர்களால் வீழ்த்த முடிந்தது.

புஜாராவின் விக்கெட்டுக்கு பிறகு, கடைசி 42 ஓவர்களை ஹனுமா விஹாரியும் அஷ்வினும் இணைந்து ஆடினர். ரிஷப் பண்ட் இலக்கை விரட்டும் முனைப்பில் அடித்து ஆடி, 118 பந்தில் 97 ரன்கள் விளாசினார். ரிஷப் பண்ட்டின் அதிரடியால் கடுப்பும் விரக்தியும் அடைந்த ஆஸி., வீரர்களும் கேப்டன் டிம் பெய்னும் புஜாராவின் பேட்டிங் மற்றும் விஹாரி அஷ்வின் இணையின் பேட்டிங் ஆகியவற்றால் கடுப்பும் விரக்தியும் அடைந்தனர்.

ஆஸி., கேப்டன் டிம் பெய்னுக்கு சிட்னி டெஸ்ட் போட்டி எல்லாவிதத்திலும் மறக்கப்பட வேண்டிய போட்டி. கடைசி நாளில் மட்டுமே 2 கேட்ச்களை விட்ட டிம் பெய்ன், வெற்றி பறிபோய்க்கொண்டிருக்கிறது என்ற விரக்தியில், டிவி அம்பயரின் முடிவை விமர்சிப்பது, அஷ்வினிடம் வம்பிழுப்பது என அநாகரித்தின் உச்சமாக செயல்பட்டார்.

இந்திய அணியின் 2வது இன்னிங்ஸின் 56வது ஓவரில் ஸ்பின்னர் நேதன் லயன் வீசிய பந்தை புஜாரா எதிர்கொண்டார். அது ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நின்ற ஃபீல்டர் மேத்யூ வேடின் கைக்கு சென்றது. அதற்கு விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் ஆஸி., வீரர்கள். கள நடுவர் அவுட் கொடுக்க மறுக்கவே, அது அவுட் என உறுதியாக நம்பிய கேப்டன் டிம் பெய்ன் டி.ஆர்.எஸ் எடுத்தார். டிவி அம்பயரும், புஜாராவின் பேட்டில் பந்து படாததால் நாட் அவுட் கொடுத்தார். ஆனால் டிவி அம்பயரின் முடிவில் திருப்தியடையாத டிம் பெய்ன், முடிவு எடுப்பதில் அம்பயர்கள் இன்கன்ஸிஸ்டண்ட்டாக இருப்பதாக விமர்சித்தார்.

இந்நிலையில், அவருக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேட்ச் விட்டது, வம்பிழுப்பதாக நினைத்து அஷ்வினிடம் வாங்கிக்கட்டியது, வெற்றி பெற வேண்டிய போட்டியை கைவிட்டது என ஏகப்பட்ட விரக்தியில் இருக்கும் ஆஸி., கேப்டன் டிம் பெய்னுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.