இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடியால் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், மூன்றாவது போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், பாகிஸ்தானை முதலில் பேட்டிங் ஆட பணித்தார். இந்த போட்டியில் இரு அணிகளுமே அதிரடியான பல மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. 

பாகிஸ்தான் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் ஃபகார் ஜமான் அதிரடியாக நீக்கப்பட்டு இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல அசிஃப் அலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஷ்தில் ஷா சேர்க்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர்கள் வஹாப் ரியாஸ் மற்றும் முகமது இர்ஃபான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களான முகமது ஹஸ்னைன் மற்றும் முகமது மூசா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாட் கம்மின்ஸுக்கு பதிலாக சீன் அப்பாட்டும், ஆடம் ஸாம்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பில்லி ஸ்டேன்லேக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், ஃபின்ச்(கேப்டன்), ஸ்மித், மெக்டெர்மோட், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் டர்னர், அஷ்டன் அகர், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், பில்லி ஸ்டேன்லேக்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், இஃப்டிகர் அகமது, குஷ்தில் ஷா, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது அமீர், முகமது ஹஸ்னைன், முகமது மூசா.

ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல வேண்டுமானால் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இந்த போட்டியில் வென்று 2-0 என தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், அதேநேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களமிறங்கியுள்ளன.