இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025-ன் 13வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையே அதிக ஸ்கோர் பதிவான போட்டி இது. இப்போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய நுலிழையில் தோல்வியடைந்தது. 

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் உலகக் கோப்பை 2025: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு விறுவிறுப்பான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை 2025-ன் 13வது போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை நிகழ்த்தியுள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 332 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது, அதை ஆஸ்திரேலிய பேட்டர்கள் எளிதாக எட்டினர். கேப்டன் அலிசா ஹீலி 142 ரன்கள் குவித்து அபாரமான சதமடித்தார். அதேசமயம், இந்திய பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பிரம்மாண்ட இலக்கு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். பதிலுக்கு களமிறங்கிய இந்திய பேட்டர்கள் 50 ஓவர்கள் கூட முழுதாக விளையாடாமல், 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்தனர். ஸ்மிருதி மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்தார். பிரதீகா ராவல் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 75 ரன்கள் விளாசினார். இவர்களைத் தவிர, ஹர்லீன் தியோல் 38, ஹர்மன்பிரீத் கவுர் 22, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33, ரிச்சா கோஷ் 32, அமன்ஜோத் கவுர் 18, தீப்தி சர்மா 1, சினே ராணா 8, கிராந்தி கவுட் 1 ரன்கள் எடுத்தனர். சர்னி ரன் ஏதும் எடுக்கவில்லை.

இறுதியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அபார கம்பேக்

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் போட்டியின் இறுதியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 365 ரன்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்னாபெல் சதர்லேண்ட் 9 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய இன்னிங்ஸுக்கு முட்டுக்கட்டை போட்டார். அவரைத் தவிர, மோலினியூ 3 விக்கெட்டுகளையும், மேகன் மற்றும் கார்ட்னர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஒருநாள் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 331 ரன்கள் என்ற இலக்கை 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது. கேப்டன் அலிசா ஹீலி 107 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 142 ரன்கள் குவித்து அசத்தினார். எல்லிஸ் பெர்ரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று, 47 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். இவர்களைத் தவிர, பி. லிட்ச்ஃபீல்ட் 40, ஆஷ்லே கார்ட்னர் 45, பெத் மூனி 4, அன்னாபெல் சதர்லேண்ட் 0, தஹ்லியா மெக்ராத் 12, சோஃபி மோலினியூ 18 மற்றும் கிம் கார்த் 14 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங்கை தடுக்க முடியாத இந்திய பந்துவீச்சாளர்கள்

பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த போதிலும், இந்திய பந்துவீச்சாளர்களால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும், சர்னி சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தவிர, தீப்தி சர்மா 10 ஓவர்களில் 52 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கவுர் 9 ஓவர்களில் 68 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கிராந்தி கவுட் 9 ஓவர்களில் 73 ரன்களையும், சினே ராணா 10 ஓவர்களில் 85 ரன்களையும் வாரி வழங்கினர்.