பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 348 ரன்களை குவித்து, 349 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி லாகூரில் இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டும், 3ம் வரிசையில் இறங்கிய பென் மெக்டெர்மோட்டும் இணைந்து அபாரமாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 70 பந்தில் 89 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

ஆனால் மெக்டெர்மோட் சதமடித்தார். 104 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லபுஷேன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 33 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை விளாசினார். சீன் அபாட் 16 பந்தில் 28 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 348 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 349 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.