RSA vs AUS: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கர் படைத்த சதம் சாதனையை ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வில்வித்தை உலகக் கோப்பை: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர்!
இதைத் தொடர்ந்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது. இதில், டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 93 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சர்வதேச போட்டிகளில் டேவிட் வார்னர் தனது 46ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதில், 20 சதம் ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு சதம் டி20 போட்டியிலும், 25 சதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி தொடக்க வீரராக அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஒரு தொடக்க வீரராக 140 இன்னிங்ஸில் 6000 ரன்களையும் வார்னர் கடந்துள்ளார். மொத்தமாக அவர் 6136 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் தொடக்க வீரராக சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் எடுத்துள்ள 45 சதம் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 76 முறை சதம் அடித்துள்ளார். இதில், 46 சதம் ஒரு நாள் போட்டியிலும், 29 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரேயொரு சதம் டி20 போட்டியிலும் அடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 99 பந்துகளில் 19 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது.
பின்னர், கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் 45 ரன்களும், டெம்பா பவுமா 46 ரன்களும், ஹென்றிச் கிளாசென் 49 ரன்களும், டேவிட் மில்லர் 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா இறுதியாக 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் மட்டுமே எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
IND vs PAK, Super 4: கேஎல் ராகுல்? இஷான் கிஷான்? யாருக்கு இடம் கிடைக்கும்?