இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி இன்று சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 8 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான பென் மெக்டெர்மோட் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் 41 பந்தில் 53 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.
ஜோஸ் இங்லிஸ்(23), மேக்ஸ்வெல்(7) மற்றும் ஸ்மித்(9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 17 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி.
150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி பேட்டிங் ஆடியபோது மழை குறுக்கீட்டால் 19 ஓவர்களாக குறைத்து போட்டி நடத்தப்பட்டது. ஆடம் ஸாம்பா அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டபோதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். ஸாம்பாவும் ஹேசில்வுட்டும் இணைந்து பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்விளைவாக 19 ஓவரில் 122 ரன்கள் மட்டுமே அடிக்க, டி.எல்.எஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேசில்வுட் வீசிய 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆடம் ஸாம்பா முக்கியமான கட்டத்தில் பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியதன் விளைவாக ஆட்டநாயகன் விருது ஸாம்பாவுக்கு வழங்கப்பட்டது.
