3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் அணியில் இஃப்டிகர் அகமது மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி 45 ரன்களை சேர்த்தார். இமாம் உல் ஹக் 14 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே இரட்டை இலக்கத்தையே தொடவில்லை. 

பாகிஸ்தான் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பாபர் அசாமை மூன்றாவது ஓவரிலேயே வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க். பாபர் அசாம் 6 ரன்களில் அவுட்டாக, அதற்கு அடுத்த பந்திலேயே கிளீன் போல்டாகி கோல்டன் டக்கவுட்டாகி வெளியேறினார் முகமது ரிஸ்வான். அவரைத்தொடர்ந்து ஹாரிஸ் சொஹைல், குஷ்தில் ஷா, இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் பொறுப்புடன் ஆடிவந்த இஃப்டிகர் அகமதுவும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே அடித்தது. 

107 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் வார்னரும் இணைந்தே போட்டியை முடித்துவைத்தனர். பாகிஸ்தான் பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. வார்னர் - ஃபின்ச் ஆகிய இருவரும் அவர்களுக்குள்ளே போட்டி போட்டு அடித்தனர். இந்த போட்டியை பார்க்கும்போது, போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்குமா அல்லது ஃபின்ச்சுக்கும் வார்னருக்குமா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஒருதலைபட்சமான போட்டியாக அமைந்தது. அந்தளவிற்கு ஆஸ்திரேலிய அணி போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. 

இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக அடித்து 12வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தனர். இதையடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது. 

t20 தரவரிசையில் நம்பர் 1 அணியான பாகிஸ்தான், இலங்கையிடம் ஒயிட்வாஷ் ஆனதை அடுத்து ஆஸ்திரேலிய அணியிடமும் மரண அடி வாங்கியுள்ளது.