பெர்த்தில் கடந்த 12ம் தேதி தொடங்கி பகலிரவு போட்டியாக நடந்த இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, லபுஷேனின் அபாரமான சதம், டிராவிஸ் ஹெட்டின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறிய பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் ரோஸ் டெய்லர் மட்டுமே நிலைத்து நின்று ஆடி 80 ரன்களை குவித்தார். அவரை தவிர வில்லியம்சன் மற்றும் கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகிய இருவரும் இரட்டை இலக்க ரன்னையே அடித்தனர். மற்றவர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 166 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க்கின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சால் 166 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து. 

250 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், நல்ல முன்னிலையில் இருப்பதால், விரைவில் முடிந்தவரை ஸ்கோர் செய்துவிட்டு நியூசிலாந்தை பேட்டிங் ஆடவிடும் முனைப்பில் விரைவில் ஸ்கோர் செய்தனர். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய லபுஷேன், இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து நன்றாக ஆடிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸும் அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ஸ்மித், வார்னர், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட் என மற்ற யாருமே சொல்லும்படியாக ஸ்கோர் செய்யவில்லை. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் அடித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து 468 ரன்கள் என்ற சாத்தியமே இல்லாத இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் ஜீட் ராவல் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன், டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோரும் சோபிக்கவில்லை. டாம் லேதம் மற்றும் வாட்லிங் ஆகிய இருவரும் களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டு ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்ஸிலும் ஸ்டார்க் தனது வேகத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டினார். ஜீட் ராவல், வாட்லிங், டெய்லர் ஆகிய முக்கியமான விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 468 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி வெறும் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்தை சுருட்ட மிகுந்த உதவியாக இருந்த ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு 40 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 216 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.