உலக கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிஸ்டாலில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சேசாய் மற்றும் ஷேஷாத் ஆகிய இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ரஹ்மத் ஷா பொறுப்பாக ஆடி 43 ரன்கள் அடித்தார். ஷாஹிடி 18, முகமது நபி 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

77 ரன்களுக்கே ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கேப்டன் குல்பாதின் நைபும் நஜிபுல்லாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஆஃப்கானிஸ்தான் அணியை இவர்கள் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். ஆறாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்கள் சேர்த்தனர். நைப் 31 ரன்களிலும் அரைசதம் அடித்த நஜிபுல்லா 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தவ்லத் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரஷீத் கான் அதிரடியாக ஆடினார். 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய 36வது ஓவரில் 2 சிக்ஸர்கள்  மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார் ரஷீத் கான். பாட் கம்மின்ஸ் வீசிய அதற்கடுத்த ஓவரில் முஜீபுர் ரஹ்மான் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். 38வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த ரஷீத், அடுத்த பந்திலேயே ஆடம் ஸாம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ரஷீத் 11 பந்துகளில் 27 ரன்களை அடித்தார். அடுத்த ஓவரில் முஜீபுர் ரஹ்மானும் ஆட்டமிழக்க, 207 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆல் அவுட்டானது. 

208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஃபின்ச்சும் வார்னரும் களமிறங்கினர். தடை முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் ஆடும் முதல் சர்வதேச போட்டி இதுதான். அதனால் சிறப்பாக ஆடும் முனைப்பில் வார்னர் களமிறங்கினார். தொடக்கம் முதலே ஃபின்ச் அடித்து ஆட, வார்னர் நிதானமாக ஆடினார். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தனர். 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து ஃபின்ச் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த உஸ்மான் கவாஜா, வார்னருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். ஆனால் அவர் களத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. அவர் 15 ரன்களிலும் ஸ்மித் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய வார்னர், ஒருநாள் போட்டியில் தனது 18வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

கடைசிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார் வார்னர். 35வது ஓவரில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்த வார்னர், தடை முடிந்து ஐபிஎல்லில் ஆடினார். ஆனால் தடை முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் ஆடும் முதல் சர்வதேச போட்டி இதுதான். அதில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் வார்னர். இந்த உலக கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் வார்னரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.