உலக கோப்பை  மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது. 

உலக கோப்பைக்கான அணியை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதால், இந்த இடங்களுக்கு யார் தேர்வாகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இன்னும் சற்று நேரத்தில் பிசிசிஐ இந்திய அணியை அறிவிக்க உள்ளது. நமது முன்னதாக நமது ஏசியாநெட் தமிழ் தளத்தின் உத்தேச அணியை பார்ப்போம். விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித், தவான், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோர் உறுதி செய்யப்பட்ட வீரர்கள். 

12வது வீரராக ராகுல் என்பதும் உறுதியான விஷயம். விஜய் சங்கருக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்கும் வகையில், அவரும் அணியில் சேர்க்கப்படுவார். மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் எடுக்கப்படுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியான விஷயம். 

15வது வீரர்தான் சர்ப்ரைஸ் தேர்வாக இருக்கும் என்பது நமது கணிப்பு. ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அபாரமாக வீசியதோடு, ஆர்சிபி அணியிலும் சிறப்பாக பந்துவீசிவரும் நவ்தீப் சைனி அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. உலக கோப்பைக்கு நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் செல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில் உமேஷ் யாதவ், கலீல் அகமது, சிராஜ் ஆகியோர் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் ஏமாற்றமளித்தனர். எனவே அபாரமாக பந்துவீசிவரும் சைனிக்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணியில் அவர் ஆடிவருவதால், அவரை பக்கத்திலிருந்து கோலி நன்றாக பார்த்திருப்பார். அதனால் அவரது திறமையை அறிந்திருப்பார் என்பதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஏசியாநெட் தமிழின் உலக கோப்பைக்கான உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி.