ஜெய் ஷா மீது பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் குற்றச்சாட்டு! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மீதான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதியின் குற்றச்சாட்டுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
2023 - 2024ம் ஆண்டுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேற்று(ஜனவரி5) வெளியிட்டார்.
2023 ஆடவர் ஆசிய கோப்பை, மகளிர் ஆசிய கோப்பை, ஏ அணிகளுக்கு இடையேயான வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை, சேலஞ்சர் கோப்பை, பிரீமியம் கோப்பை, அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர்கள் என ஆசிய அணிகளுக்கு இடையேயான 2023-2024ம் ஆண்டுகளுக்கான அனைத்து தொடர்கள் விவரங்களை வெளியிட்டது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கருத்தே கேட்காமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தன்னிச்சையாக 2023-2024ம் ஆண்டுகளுக்கான ஆசிய போட்டி தொடர் விவரங்களை வெளியிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி டுவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் கருத்தை கேட்டு அதிருப்தியடைந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆதாரங்களுடன் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்து ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல்..!
இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வியாழக்கிழமை 2023-2024ம் ஆண்டுக்கான போட்டி காலண்டரை வெளியிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தன்னிச்சையாக இந்த காலண்டரை வெளியிட்டதாக கருத்து கூறியதாக அறிந்தோம். அது முழுக்க முழுக்க தவறான தகவல். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த காலண்டரை அனைத்து மெம்பர் கிரிக்கெட் வாரியங்களுக்கும் இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஈ-மெயில் மூலம் அனுப்பியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஒப்புதல் மெயில் வந்தது. ஆனால் எந்த மாற்றத்தையும் அந்த கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்கவில்லை. எனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறிய குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது; ஆதாரமற்றது என்று பதிலடி கொடுத்துள்ளது.