Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இனி இலங்கை பைனலுக்கு செல்வது மிகவும் கடினம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் ஃபோர் சுற்றில் இலங்கைக்கு எதிரான முக்கியப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிகப்பட்ச ரன்களை அடித்தார்.
பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை அணி
இலங்கை அணியின் முக்கியமான வீரர்கள் குசல் மெண்டிஸ் (0), பதும் நிசாங்கா (8), குசல் பெரேரா (15), சரித் அசலங்கா (20), தசுன் ஷனகா (0) ஆகியோர் மொத்தமாக சொதப்பினார்கள். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹுசைன் தலாத் மற்றும் ஹாரிஸ் ரவூஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பாகிஸ்தான் தடுமாற்றம்
பின்பு ஆடிய பாகிஸ்தான் அணி 5.3 ஓவரில் 45 ரன் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தது. சாஹிப்சாதா ஃபர்ஹான் (15 பந்தில் 24 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்பு பாகிஸ்தான் விக்கெட் கொத்து கொத்தாக விழுந்தது. ஃபக்கர் ஜமான் (17), சயீம் அயூப் (2), கேப்டன் சல்மான் ஆகா (5) என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் 57/4 என பரிதவித்தது. பின்பு முகமது ஹாரிசும் (13) அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 80/5 என்ற நிலையில் இருந்தது.
காப்பாற்றிய முகமது நவாஸ், ஹுசைன் தலாத் ஜோடி
இதன்பின்பு ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் (24 பந்தில் 38 ரன்), ஹுசைன் தலாத் (32) எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழந்து 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதே வேளையில் இலங்கை அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு மங்கியுள்ளது. நாளை இந்தியாவும், வங்கதேச அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வங்கதேசம் வென்றால் பாகிஸ்தான் அணியின் நிலைமையும் சிக்கலாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
