ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025-26 ஆஷஸ் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025-26 ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட வலுவான அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்குவார் என்றும், இளம் வீரர் ஹாரி ப்ரூக் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

ECB வெளியிட்ட அறிக்கையில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025/26 ஆஷஸ் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து ஆண்கள் தேர்வு குழு அறிவித்துள்ளது. ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஹாரி ப்ரூக் உறுதி செய்யப்பட்டுள்ளார், அவர் ஓலி போப்பிற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்."

மார்க் வுட் திரும்பினார்

மேலும், கடைசியாக ஆகஸ்ட் 2024-ல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது ஏற்பட்ட விரல் காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

வில் ஜாக்ஸ் அணியில் சேர்ப்பு

டர்ஹாம் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் மற்றும் சர்ரே பேட்டிங் ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாட்ஸ் கடைசியாக டிசம்பர் 2024-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஜாக்ஸ் கடைசியாக டிசம்பர் 2022-ல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். விரல் முறிவு காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரை ஜாக்ஸ் தவறவிடுவார், ஆனால் ஆஷஸ் தொடருக்குள் அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ்

டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியிலிருந்து அவரை வெளியேற்றிய தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டு வருகிறார். நவம்பர் 21-ம் தேதி தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு அவர் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 2011-க்குப் பிறகு வெளிநாட்டில் முதல் ஆஷஸ் தொடரையும், 2015-க்குப் பிறகு முதல் முறையாக ஆஷஸ் தொடரையும் வெல்ல இங்கிலாந்துக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

இங்கிலாந்து அணிக்கு காத்திருக்கும் சோதனை

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 'பாஸ்பால்' அணுகுமுறைக்கு, கடினமான, வேகமான மற்றும் பவுன்ஸ் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இது ஒரு இறுதி சோதனையாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், சாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், மார்க் வுட்.