Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி இலங்கையை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச வீரர்கள் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சூப்பராக செயல்பட்டனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 14 ஓவரில் 97/4 என தடுமாறிய இலங்கை அணியை தசுன் சனகா தனது அதிரடியால் மீட்டார்.
இலங்கை அணி 168 ரன்கள்
சிக்சர் மழை பொழிந்த தசுன் சனகா 6 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 37 பந்தில் 64 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 25 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் முஸ்தாபிசுர் மூன்று விக்கெட்டுகளையும், மெஹதி ஹசன் 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி
பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டான்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் நுவான் துஷார பந்தில் கிளீன் போல்டானார். இதன்பிறகு கேப்டன் லிட்டன் தாஸும், சைஃப் ஹாசனும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்கள்.
அதிரடி அரை சதம் அடித்த சைஃப் ஹாசன்
ஓரளவு நன்றாக விளையாடிய லிட்டன் தாஸ் 16 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 60/2 என்ற நிலையில் இருந்தது. மறுமுனையில் அதிரடியில் வெளுத்துக் கட்டி சிக்சர் மழை பொழிந்த சைஃப் ஹாசன் அரை சதம் அடித்து அசத்தினார். அவருக்கு ஹிரிதோய் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். சூப்பராக விளையாடிய சைஃப் ஹாசன் 45 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 61 ரன் எடுத்து ஹசரங்கா பந்தில் கேட்ச் ஆனார்.
காட்டடி அடித்த ஹிரிதோய்
ஆனால் மறுபக்கம் ஹிரிதோய் சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கினார். கமிந்து மெண்டிஸின் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். தொடர்ந்து அட்டகாசமாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற ஹிரிதோய் 37 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 58 ரன் எடுத்து அவுட் ஆனார். வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்களே தேவைப்பட்டது. இலங்கையின் தசுன் சனகா கடைசி ஓவரை வீசினார்.
வங்கதேச அணி வெற்றி
முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய ஜாக்கர் அலி (9) 2வது பந்தில் போல்டானார். 3வது பால் டாட் பால் ஆக, 4வது பந்தில் மெகதி ஹசனும் டக் அவுட் ஆனதால் கடைசி 2 பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. 5வது பாலை எதிர்கொண்ட ஷமிம் ஹொசைன் 1 ரன் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 169 ரன் எடுத்து வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி நெருக்கடி சிக்கியுள்ளது. அந்த அணி இந்தியா, பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
