கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் 13வது சீசன் ரத்தாகும் அபாயம் உள்ள நிலையில், ஐபிஎல்லை எப்போது எப்படி நடத்தலாம் என்று முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவிவரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுப்பதற்காக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான். நிலைமை சீரடைவதற்கே சில மாதங்கள் ஆகும் என்பதால், ஐபிஎல் நடப்பது சந்தேகம் தான்.
இந்நிலையில், இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட நேர்ந்தால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்படலாம், டி20 உலல கோப்பை அக்டோபர் 18ம் தேதி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஐபிஎல்லை நடத்தலாம் என்பன போன்ற பல கருத்துகள் உலாவந்தன. ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்துவருகின்றனர்.
ஆனால். ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஏப்ரல் 15ம் தேதி ஆலோசனை நடத்தி அதன்பின்னர் தான் ஐபிஎல் குறித்த திடமான முடிவெடுக்கப்படும்.
இந்நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா, ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்பதால், அப்போது ஐபிஎல்லை நடத்தினால் பெரும்பாலான போட்டிகள் ரத்தாக வாய்ப்புள்ளது. ஆனால் கொரோனாவிலிருந்து முழுமையாக அக்டோபர் மாதத்தில் உலகம் மீண்டுவிட்டது என்றால் அதன்பின்னர் ஐபிஎல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று நெஹ்ரா தெரிவித்தார்.
அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஐபிஎல் நடத்த தீர்மானித்தால், ஏற்கனவே, அக்டோபருக்கு பிறகு திட்டமிட்ட போட்டிகள் ஒத்திவைக்கப்பட வேண்டும். இப்படியாக மொத்த போட்டி அட்டவணைகளையும் மாற்றி, ஏற்கனவே அட்டவணைப்படுத்த தொடர்களை ஒத்திவைத்து ஐபிஎல் நடத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல்லுக்காக மற்ற போட்டி தொடர்களை ஒத்திவைக்கப்படுவது சந்தேகம் தான் எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 8, 2020, 5:08 PM IST