பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன்சியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், தனது கிரிக்கெட் கெரியரில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். ஆனால், ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்டில் கேப்டன் கம்மின்ஸ் ஆடாததால் அவருக்கு மீண்டும் கேப்டன்சி வாய்ப்பு கிடைத்துள்ளது. 

2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய வீரர்கள் சேர்ந்து பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடித்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஸ்மித், கேப்டன்சியை இழந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்மித், ஓராண்டு தடையில் இருந்தார். தடை முடிந்து அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினாலும், அவர் இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன்சி செய்ய வாய்ப்பேயில்லை என்று கருதப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட அசாத்தியமான அந்த வாய்ப்பை மீண்டும் பெற்றுள்ளார் ஸ்மித்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன், சக பெண் ஊழியர்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கேப்டன்சியை துறந்ததுடன், ஆஷஸ் தொடருக்கான அணியிலிருந்தும் விலகினார். இதையடுத்து பாட் கம்மின்ஸ் ஆஸி., டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

ஸ்மித்தை துணை கேப்டனாக நியமித்ததற்கே ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் எதிர்ப்பு தெரிவித்தார். ஏமாற்றுக்காரனையா துணை கேப்டனாக நியமிப்பது என்று கொதித்தார் இயன் சேப்பல்.

ஆனால் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவே செயல்படும் வாய்ப்பை பெற்றார் ஸ்டீவ் ஸ்மித். அடிலெய்டில் இன்று தொடங்கிய 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆடவில்லை. போட்டிக்கு முந்தைய நாள் இரவு ரெஸ்டாரெண்ட்டில் கொரோனா பாசிட்டிவ் நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் கம்மின்ஸ். அதனால் அடிலெய்ட் டெஸ்ட்டில் அவர் ஆடவில்லை.

அதனால் ஸ்டீவ் ஸ்மித் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். இது அவரே எதிர்பார்த்திராத அவருக்கு கிடைத்த மறுவாய்ப்பு. ஏனெனில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின்போது, மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினால் போதும் என்ற மனநிலையில் இருந்த ஸ்மித், இப்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.