ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி மழையால் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி லார்ட்ஸில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஸ்மித், இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணியை வைத்து செய்தார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 258 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரம் போட்டு இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார் ஸ்மித். 

அபாரமாக ஆடிய ஸ்மித், 92 ரன்களில் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார் ஸ்மித். சதத்தை தவறவிட்டிருந்தாலும், சாதனையை தவறவிடவில்லை. இந்த 92 ரன்களுடன் சேர்த்து, ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். 6 முறை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்த மைக் ஹசியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார் ஸ்மித். 

ஸ்மித்தின் விக்கெட்டுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி மளமளவென சரிய, 250 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால் போட்டி டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது. 

இந்த போட்டியில் மோசமான ஒரு பவுன்ஸரை போட்டு ஸ்மித்தை நிலைகுலையை செய்தார் ஆர்ச்சர். ஸ்மித்தை அவுட்டாக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிக்கொண்டிருந்தனர். அப்போது, 77வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை தலைக்கு நேராக பவுன்ஸராக வீசினார். அந்த பந்தை அடித்தால் விக்கெட் போய்விடும் என்பதால் அதை அடிக்கவும் முடியாது. 

148 கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசிய அந்த பவுன்ஸருக்கு ஸ்மித் ரியாக்ட் செய்வதற்குள், பந்து வேகமாக வந்து ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் பலமாக அடித்தது. அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். உடனடியாக ஃபிசியோ வந்து பரிசோதித்தார். அதன்பின்னர் ஸ்மித் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் சிடில் விக்கெட்டுக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்த ஸ்மித், அதன்பின்னர் பெரிதாக ஆடவில்லை. 92 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். அந்த வீடியோ இதோ..