ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமாரின் ஸ்போர்ஸ்மேன்ஷிப் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் செய்யாத சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக அசத்தினார். இரண்டு கேட்சுகளைப் பிடித்த சஞ்சு, யுஏஇ வீரர் ஜுனைத் சித்திக்கை ரன்-அவுட் செய்தார். ஆனால், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அப்பீலை வாபஸ் பெற்றதால் ரன்-அவுட் நிராகரிக்கப்பட்டது.

வினோதமான ரன் அவுட்

அதாவது 13வது ஓவரில் சஞ்சுவின் சாமர்த்தியத்தால் கிடைத்த ரன்-அவுட்டை இந்தியா வேண்டாம் எனக் கூறியது. ஷிவம் துபேவின் பவுன்சரில் புல் ஷாட்டுக்கு முயன்ற சித்திக்கால் பந்தைத் தொட முடியவில்லை. விக்கெட் கீப்பரான சஞ்சு, சித்திக்கின் கால் கிரீஸுக்கு வெளியே இருப்பதை உறுதி செய்து, பந்தை ஸ்டம்பில் எறிந்து ரன்-அவுட்டுக்கு அப்பீல் செய்தார். வீடியோ ரீப்ளேயைப் பார்த்த டிவி அம்பயர் அவுட் கொடுத்தார். ஸ்கிரீனிலும் அவுட் எனத் தெரிந்தது. பின்னர், மைதான அம்பயரும் அவுட் கொடுத்தார்.

அப்பீலை வாபஸ் பெற்ற சூர்யகுமார் யாதவ்

ஆனால், ஜஸ்பிரித் பும்ரா சஞ்சுவிடம் ஏதோ விளக்கினார். மைதான அம்பயர் அவுட் கொடுத்தும், சித்திக் கிரீஸை விட்டு வெளியேறவில்லை. பின்னர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதான அம்பயரிடம் ரன்-அவுட் அப்பீலை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். பந்து வீசும்போது ஷிவம் துபேவின் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது. இது பேட்ஸ்மேனின் கவனத்தைத் திசை திருப்பியதால், ரன்-அவுட் அப்பீலை வாபஸ் பெறுவதாக சூர்யகுமார் தெரிவித்தார். ஷிவம் துபேவின் இடுப்பில் இருந்து துண்டு கீழே விழுந்ததை அம்பயர் கவனிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் அந்தப் பந்தை டெட் பாலாக அறிவிப்பதுதான் வழக்கம்.

Scroll to load tweet…

ஆனாலும் ஆயுள் நீடிக்கவில்லை

ரன்-அவுட் அப்பீலை வாபஸ் பெறுவதாக சூர்யகுமார் தெரிவித்ததால், அம்பயர் சித்திக்கை நாட்-அவுட் கொடுத்தார். ஆனால், இந்த வாய்ப்பை சித்திக்கால் பயன்படுத்த முடியவில்லை. அடுத்த பந்திலேயே ஷிவம் துபே பந்தில் அவர் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.