இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்தை இறக்கலாம் என்ற கங்குலியின் கருத்துடன் அனில் கும்ப்ளே முரண்பட்டுள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார். நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களாலும் ராகுல் புகழப்படுவது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரால் அணிக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கும் அளவிற்குத்தான் அவரது ஆட்டம் இருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் இரண்டையுமே அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது எனுமளவிற்கு படுமோசமாக ஆடிவிட்டுச் சென்றார். 

ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையிலும், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ராகுல் எவ்வளவு மோசமாக சொதப்பினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் அதேவேளையில், உலக கோப்பையில் அபாரமாக ஆடியதன் விளைவாக மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரோஹித் சர்மாவிற்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை முன்னாள் கேப்டன் கங்குலி பதிவு செய்திருந்தார். அவரது கருத்தையே கம்பீரும் பிரதிபலித்தார். ஆனால் கங்குலி, கம்பீரின் கருத்திலிருந்து அனில் கும்ப்ளே முரண்பட்டுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சரியாக இருக்கமாட்டார் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அனில் கும்ப்ளே, இந்திய அணி கண்டிப்பாக தொடக்க வீரரை மாற்றியே தீர வேண்டும் என்ற நிலையில் இருந்தால்தான் ரோஹித்தை தொடக்க வீரராக இறக்குவது பற்றி யோசிக்க வேண்டும். அப்படியொரு நிலையில் இருந்தால் கூட ரோஹித்தை தொடக்க வீரராக இறக்குவது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ரோஹித் மாதிரியான சிறந்த வீரரை ஆடும் லெவனில் எடுக்காமல் பென்ச்சில் உட்காரவைப்பது வருந்தத்தக்க சம்பவம்தான். ஆனால் அதற்காக அவர் தொடக்க வீரராகத்தான் இறக்கப்பட வேண்டுமா என்ன என்று கும்ப்ளே கேள்வி எழுப்பியுள்ளார்.