வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர், அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல். ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடிவரும் அவருக்கு ஐபிஎல்லில் தனி இடம் இருக்கிறது. கடந்த சீசனில் தனி ஒருவனாக பல போட்டிகளில் அருமையாக ஆடி அசத்தினார். 

நல்ல உடல்வலிமை கொண்ட ஆண்ட்ரே ரசல், சில பந்துகளில் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய அளவிற்கு அதிரடி பேட்ஸ்மேன். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக அசாத்திய இன்னிங்ஸ்களை ஆடி அசத்தினார். 

கடந்த ஒரு சீசனில் அவர் ஆடிய அதிரடியான இன்னிங்ஸ்களால் ஏராளமான ரசிகர்களை இந்தியாவில் சம்பாதித்துள்ளார் ஆண்ட்ரே ரசல். அந்தவகையில், கடந்த ஐபிஎல்லில் சன்ரைசர்ஸூக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த போட்டியில், தனது பேட்டிங்கிற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்ததை கண்டு கண்கலங்கியுள்ளார் ஆண்ட்ரே ரசல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்த குறிப்பிட்ட போட்டியில் கேகேஆர் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு. 17 ஓவரில் 129 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த கேகேஆர் அணிக்கு, கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை. அந்த போட்டியில், பவுலிங்கில் சிறந்த அணியான சன்ரைசர்ஸின் பவுலிங்கை, அதுவும் டெத் ஓவரை சிறப்பாக வீசக்கூடிய புவனேஷ்வர் குமார் பவுலிங் உட்பட அனைவரது பவுலிங்கையும் டெத் ஓவரில் வெளுத்து வாங்கிய ரசல், அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

அந்த போட்டியில் வெறும் 19 பந்தில் 49 ரன்களை குவித்து கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அந்த போட்டியில் ரசலுடன் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில்லும் சிறப்பாக ஆடினார். இருவரும் இணைந்து கேகேஆர் அணியை வெற்றி பெறச்செய்தனர். ஆண்ட்ரே ரசலின் அந்த இன்னிங்ஸ், ரசிகர்களின் கண்களுக்கு செம விருந்தாக அமைந்தது. 

அந்த இன்னிங்ஸுக்கு பிறகு ரசல் கண்கலங்கியதாக அந்த அணியின் சி.இ.ஓ வெங்கி தெரிவித்துள்ளார். ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இம்முறை ரசிகர்களே இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. அதுகுறித்து பேசும்போது, பார்வையாளர்களே இல்லாமல் ஐபிஎல் ஆடும் அனுபவம் வீரர்களுக்கு புதிதாக இருக்கும். 

கடந்த ஆண்டு சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில், அசாத்திய வெற்றியை ஆண்ட்ரே ரசல் பெற்றுக்கொடுத்தார். டெத் ஓவர்களை அபாரமாக வீசக்கூடிய புவனேஷ்வர் குமார் எதிரணியில் இருந்தும் கூட, ஆண்ட்ரே ரசல் அருமையாக ஆடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த போட்டியில், ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு நெகிழ்ந்துபோனார் ரசல். ஆஃப் ஸ்ப்டம்புக்கு வெளியே மெதுவாக வீசப்பட்ட பந்தை அபாரமான ஷாட்டின் மூலம் சிக்ஸருக்கு அனுப்பினார். அந்த ஷாட் மிகக்கடினமான ஷாட். அவர் அடித்த விதத்தை கண்டு வியந்துபோய், போட்டிக்கு பின்னர், என்ன ஷாட் அது ரசல் என்று கேட்டேன். அதற்கு, அந்த ஷாட்டுக்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்ததை கண்டு தனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டதாகவும், கண்கள் கலங்கியதாகவும் ரசல் என்னிடம் தெரிவித்தார் என்று வெங்கி தெரிவித்துள்ளார். 

இந்திய ரசிகர்களின் அபிப்ராயத்தை பெறுவது மிகப்பெரிய கொடுப்பனை. அது ஆண்ட்ரே ரசலுக்கு கிடைத்திருப்பது அவருக்கு கிடைத்த பாக்கியம்.