கரீபியன் பிரீமியர் லீக்கில் நேற்று கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா தல்லாவாஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி,  20 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் யாருமே சரியாக ஆடி நன்றாக ஸ்கோர் செய்யவில்லை. தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் 29 ரன்களும், சந்தர்பால் ஹேம்ராஜ் 21 ரன்களும், ரோஸ் டெய்லர் 21 ரன்களும் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். பவுலர் நவீன் உல் ஹக் தன் பங்கிற்கு 14 ரன்கள் அடித்ததால், அந்த அணி 20 ஓவரில் 118 ரன்கள் அடித்தது.

119 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே டக் அவுட்டாகினர். கேப்டன் ரோவ்மன் பவல் 30 பந்தில் 23 ரன்களும் ஆசிஃப் அலி 20 பந்தில் 14 ரன்களும் அடித்தனர். கார்லஸ் பிராத்வெயிட் 14 பந்தில் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தனர். இலக்கு எளிதானது தான் என்றாலும், இவர்கள் அனைவருமே அதிகமான பந்தில் குறைந்த ரன்கள் அடித்து, நிறைய பந்துகளை வீணடித்ததால், ஜமைக்கா தல்லாவாஸ் அணி மீதான நெருக்கடி அதிகரித்தது. 
 
அதனால், 7ம் வரிசையில் இறங்கிய ஆண்ட்ரே ரசல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தும் கூட, அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. ஆண்ட்ரே ரசல் தனது வழக்கமான பாணியில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ரசல் அரைசதம் அடித்தார். 37 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும்  சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனால் மறுமுனையில் சரியான பார்ட்னர் இல்லாததாலும், முன்வரிசை வீரர்கள் அதிகமான பந்துகளை வீணடித்ததாலும், ரசலால் அந்த இலக்கை வெற்றிகரமாக எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 104 ரன்கள் மட்டுமே அடித்து 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி தோல்வியடைந்தது.

கரீபியன் பிரீமியர் லீக்கில், 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்டிய அணியை அடிக்கவிடாமல் சுருட்டிய மிகக்குறைந்த இலக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.