இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய சர்ஃபராஸ் கான் 3 போட்டிகளில் 200 ரன்கள் குவித்த நிலையில், அவரது பெற்றோருக்கு ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் தார் ஜீப்பை பரிசாக அளித்துள்ளது.
ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 131 ரன்கள் எடுக்க, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்தார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சர்ஃபராஸ் கான் 62 ரன்களில் ரன் அவுட் செய்ய்ப்பட்டார். 2ஆவது இன்னிங்ஸில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதே போன்று 4ஆவது டெஸ்ட் போட்டியில் 14 ரன்களும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 56 ரன்களும் எடுத்தார். மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் குவித்தார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிதன் மூலமாக பிசிசிஐ ஒப்பந்தம் அளித்தது. இதில், சி கிரேடு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்டுக்கு ஒரு கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது அறிமுக டெஸ்ட் போட்டிகளில் இப்படியொரு சாதனைகளை படைத்த சர்ஃபராஸ் கானை பாராட்டும் வகையில் அவரது பெற்றோரு ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் தார் ஜீப்பை பரிசாக அளித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக செஸ் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யுவி காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசாக அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
