இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் பெற்றோருக்கு ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளது.
இந்தியாவில் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர் ஆர் பிரக்ஞானந்தா. தற்போது 18 வயதில் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்திருந்தார். டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலமாக பிரக்ஞானந்தா இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடம் பிடித்திருந்தார்.
உலக தரவரிசைப் பட்டியலில் 200 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ள உலக சாம்பியனான டிங் லிரனை, தமிழகத்தைச் சேர்ந்த ஆர் பிரக்ஞானந்தா வீழ்த்தி இந்த அற்புதமான சாதனையை படைத்திருந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்திருக்கிறார்.
பிரக்ஞானந்தா மட்டுமின்றி அவரது சகோதரி வைஷாலி இந்தியாவின் 84ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றிருகிறார். கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு இந்தியாவின் 3ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனைக்கு வைஷாலி சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் தான், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் பெற்றோருக்கு ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் புதிதாக எக்ஸ்யூவி 400 என்ற பிராண்ட் நியூ எலக்ட்ரிக் காரை பரிசாக அளித்துள்ளார்.
எக்ஸ்யூவி 400 காரை பெற்றுக் கொண்ட நிலையில் ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்திற்கு பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
