ஐபிஎல் 12வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

சிஎஸ்கேவிற்கு எலிமினேட்டர் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸை வீழ்த்தி வென்ற டெல்லி அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை நடக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியும் சன்ரைசர்ஸும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடியான தொடக்கம் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடியான ஃபினிஷிங்கால் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. 

டெல்லி வீரர் அமித் மிஷ்ரா, இந்த போட்டியில் ஃபீல்டரை தொந்தரவு செய்யும்படி ரன் ஓடியதால் அவுட்டானார். 163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. பாசில் தம்பி வீசிய 18வது ஓவரில் 22 ரன்களை குவித்து வெற்றியை உறுதி செய்த ரிஷப் பண்ட், 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. நான்காவது பந்தை எதிர்கொண்ட அமித் மிஷ்ரா, பந்தை அடிக்காமல் மிஸ் செய்தார். ஆனாலும் ஒரு ரன் ஓடினர். அப்போது பவுலிங் முனையை நோக்கி விக்கெட் கீப்பர் சஹா த்ரோ செய்தார். அந்த பந்தை பவுலரான கலீல் அகமது பிடித்து ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால் கலீல் அகமதுவால் ஸ்டம்பிற்கு நேராக வீசவிடாமல் அவரை தொந்தரவு செய்யும் விதமாக ஸ்டம்பிற்கு நேராக வேண்டுமென்றே ஓடினார் அமித் மிஷ்ரா. அந்த பந்தை கலீல் ஸ்டம்பில் அடிக்கவில்லை. எனினும் அவர் ஃபீல்டரை தொந்தரவு செய்தது உறுதியானதால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. 

அமித் மிஷ்ராவின் செயலைக்கண்ட ரசிகர்களும் நெட்டிசன்களும் அவரை கடுமையாக விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.