இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அலெக்ஸ் கேரியின் சூப்பர் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது. உஸ்மான் கவாஜா அரை சதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் பரிதவித்த ஆஸ்திரேலியா
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டீபன் ஸ்மித் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் (10 ரன்), ஜேக் வெதெரால்டு (18) விரைவில் வெளியேறினார்கள். பின்பு மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் உஸ்மான் கவாஜா இணைந்து அணியை 94 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து லபுஸ்சேன் (19) ஆர்ச்சர் பந்தில் காலியாக, ஐபிஎல்லில் 25 கோடிக்கு ஏலம் போன கேமரூன் கிரீன் வந்த வேகத்தில் ஆர்ச்சர் பந்தில் டக் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியாஅ 94/4 என பரிதவித்தது.
அலெக்ஸ் கேரி சூப்பர் சதம்
ஆனால் உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி அட்டகாசமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை ஓடவிட்டனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 126 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 82 ரன்னில் அவுட் ஆனார். மறுபக்கம் அட்டகாசமாக ஆடிய அலெக்ஸ் கேரி தனது முதலாவது ஆஷஸ் டெஸ்ட்டை விளாசி அசத்தினார். அப்போது மைதானத்தில் இருந்த அவரது மனைவி எலோயிஸ் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
முதல் நாளில் ரன்கள் குவிப்பு
தொடர்ந்து அலெக்ஸ் கேரி 143 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதற்கிடையே ஜோஸ் இங்கிலீஷ் (32), கேப்டன் பேட் கம்மின்ஸ் (13) விரைவில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. மிட்ச்செல் ஸ்டார்ட்க் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


