2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. மிட்ச்செல் ஸ்டார்க் ஆல்ரவுண்டாக ஜொலித்தார். 

பிரிஸ்பேனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் சூப்பர் சதம் (138 ரன்கள்) விளாசினார். ஜாக் கெரொலி 76 ரன்கள் அடித்தார். மிட்ச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.பின்பு ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது.

2வது இன்னிங்சிலும் இங்கிலாந்து மோசம்

ஜேக் வெதரால்ட் (72 ரன்), மார்னஸ் லபுஸ்சேன் (65 ரன்), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (61 ரன்), அலெக்ஸ் கேரி (64), மிட்ச்செல் ஸ்டார்க் (77) ஆகிய 5 பேர் அரை சதம் அடித்து அசத்தினார்கள். இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். பின்பு தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் (50) அரை சதம் அடித்தார். மைக்கேல் நேசர் 5 விக்கெட்டுகளையும், மிட்ச்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 65 என்ற எளிய இலக்கு நிர்ணம் செய்யப்பட்டது. எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டீபன் ஸ்மித் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 22 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆல்ரவுண்டராக கலக்கிய மிட்ச்செல் ஸ்டார்க்

ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை பந்தாடிய ஆஸ்திரேலிய 2வது போட்டியிலும் சூப்பர் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளும், அரை சதமும் விளாசிய மிட்ச்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.