உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன. 

சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஷோயப் மாலிக், ஹஃபீஸ் போன்ற அனுபவ வீரர்கள் மற்றும் ஃபகார் ஜமான், ஷாஹீன் அஃப்ரிடி போன்ற இளம் வீரர்கள் என அனுபவ மற்றும் இளம் வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான அணியாக திகழ்கிறது. 

இந்நிலையில், உலக கோப்பையில் ஆட உள்ள பாகிஸ்தான் அணியில் யார் ஸ்மார்ட்டான வீரர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அக்தர், ஹாரிஸ் சொஹைல் அருமையான வீரர். சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடுகிறார் அவர். சிங்கிள் - டபுள்ஸாக அடித்து ஸ்டிரைக் ரொடேட் செய்து ஆடுவதுடன், அதிரடியாக ஆடி சதமும் அடிக்கிறார். அவர் சூழலுக்கு ஏற்ப அபாரமாக ஆடுகிறார். அவரது முழங்கால் மட்டும்தான் அவருக்கு பிரச்னை. ஆனால் அவர்தான் தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஸ்மார்ட்டான வீரர் என்று அக்தர் புகழ்ந்துள்ளார்.