உலக கோப்பை தொடரின் லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று தொடங்கப்படவுள்ளது. அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவதும் உறுதியாகிவிட்டது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் நன்றாக உள்ளதால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதும் உறுதி.

இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஒரு போட்டி எஞ்சியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான அந்த போட்டியில் பாகிஸ்தான் வென்று, அதேநேரத்தில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து தோற்றால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

இங்கிலாந்து அணி இந்தியாவிடம் தோற்றிருந்தால், பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதனால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி வெல்ல வேண்டும் என விரும்பினர். அந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி உதவ வேண்டும் என்று அக்தர் கிண்டலாக கூறுவதுபோல தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். 

பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என பிரார்த்தனை செய்ததோடு, இந்திய அணிக்கே ஆதரவும் தெரிவித்தனர். இந்திய ரசிகர்களுடன் இணைந்து பாகிஸ்தான் ரசிகர்களும் இந்திய அணிக்கு ஆதரவாக இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினர். 

ஆனால் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அக்தர், பாகிஸ்தான் ரசிகர்களின் பிரார்த்தனை இந்திய அணியை சென்று சேரவில்லை. இந்திய அணி தோற்றுவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவுக்கு பிறகு முதன்முறையாக ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் இந்திய அணி தோற்றுவிட்டது என அக்தர் தெரிவித்துள்ளார்.