இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் தான் அபாயத்தில் உள்ளதாக அஜித் அகார்கர் கருத்து கூறியுள்ளார்.  

இந்திய அணியின் இளம் திறமையான வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். இந்தியாவிற்காக 5 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளார்.

மிகத்திறமையான பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தனக்கான இடத்தை பிடித்துவைத்திருந்தார். டெஸ்ட் அணியிலும் கூட இடம்பிடித்தார். எல்லா விதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடக்கூடிய, சூழலுக்கேற்ப ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஆனால் ஷார்ட் பிட்ச் பந்துகளை மட்டும் எதிர்கொள்ள திணறுகிறார். அவரது இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ளும் எதிரணிகள், ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசியே அவரை வீழ்த்திவிடுகின்றன. தனது பலவீனம் எதிரணிகளுக்கு தெரிந்துவிட்டது என்பதை ஷ்ரேயாஸ் அறிந்திருந்தாலும், அவரால் அதை இதுவரை சரிசெய்து கொள்ள முடியவில்லை. இதுவே அவருக்கு பெரிய எதிரியாகவும் மாறிவிட்டது.

இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இடத்துக்கு போட்டி போடுவது, சூர்யகுமார் யாதவுடன். சூர்யகுமார் யாதவ் மிகத்திறமையான வீரர். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட நிலையில், கோலி, ரிஷப் ஆகியோர் ஆடாத போட்டிகளில் மட்டுமே ஷ்ரேயாஸ் ஐயர் ஆட வாய்ப்பு கிடைக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி ஆடாததால் 3ம் வரிசையில் இறங்க வாய்ப்பு பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனால் கோலி வந்துவிட்டால் ஷ்ரேயாஸ் ஐயர் ஓரங்கட்டப்படுவார்.

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் சந்தேகம் தான் என்று அஜித் அகார்கர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் தான் அபாயத்தில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் எப்பேர்ப்பட்ட வீரர்; அவர் எப்படி ஆடிக்கொண்டிருக்கிறார் என்பது நமக்கு தெரியும். மேலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பிட்ச் பந்து பிரச்னை உள்ளது. இப்போதெல்லாம், ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர் ஆடாமல் விட்டுவிடுகிறார். அது நல்ல ஐடியாதான். இயல்பாக புல் ஷாட் ஷ்ரேயாஸுக்கு வரவில்லை. எனவே ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆரம்பத்தில் விட்டுவிட்டு, களத்தில் நிலைத்த பின்னர் ஷார்ட் பந்துகளை ஆடலாம் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.