IPL 2023: தோனியின் கேப்டன்சியில் ஆடினால் எதையும் சாதிக்கலாம் - அஜிங்க்யா ரஹானே(2.0)
தோனியின் கேப்டன்சியில் ஆடும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார்.
ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்வது சிஎஸ்கே அணி. அதற்கு முக்கியமான காரணம் கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி.
பெரிய வீரர்களை மட்டும் வைத்து ஆடாமல், இளம் வீரர்களை அணியில் எடுத்து அவர்களது திறமையை முழுமையாக பயன்படுத்தி வெற்றிகளை பறிக்கும் வித்தையறிந்தவர் தோனி. மற்ற கேப்டன்களின் கீழ் சரியாக ஆடாத வீரர்களும் கூட தோனியின் கேப்டன்சியில் சிறப்பாக ஆடி மேட்ச் வின்னர்களாக ஜொலித்திருப்பதை பார்த்திருக்கிறோம்.
ஷேன் வாட்சன், மொயின் அலி ஆகிய வீரர்கள் ஐபிஎல்லில் வேறு அணிகளில் ஆடியதை விட தோனியின் கேப்டன்சியில் அபாரமாக ஆடி சிஎஸ்கேவிற்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கின்றனர். அந்தவரிசையில் இப்போது ரஹானேவும் இணைந்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, ஐபிஎல்லிலும் அனைத்து அணிகளாலும் கைவிடப்பட்ட அஜிங்க்யா ரஹானேவை ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணி, அவர் மீது நம்பிக்கை வைத்து 3ம் வரிசையில் இறக்கிவிட்டு சுதந்திரமாக ஆடவிட்டது.
சிஎஸ்கேவிற்காக இறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரஹானே, கேகேஆருக்கு எதிராக நேற்று ஆடிய போட்டியில் 19 பந்தில் அரைசதம் அடித்து ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ரஹானே. இந்த சீசனில் அஜிங்க்யா ரஹானே சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்கிறார்.
அஜிங்க்யா ரஹானே அவரது கெரியரின் ஆரம்பக்காலத்தில் கூட இந்தளவிற்கு ஆடியதில்லை. ரஹானேவின் 2.0 வெர்சனை நாம் இந்த சீசனில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தளவிற்கு அதிரடியாக ஆடி தெறிக்கவிடுகிறார். இந்நிலையில், கேகேஆருக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய அஜிங்க்யா ரஹானே, இதுவரை நான் இந்த சீசனில் ஆடிய இன்னிங்ஸ்களை ரசித்து மகிழ்ந்து ஆடியிருக்கிறேன். இன்னும் எனது சிறப்பான இன்னிங்ஸ் வரவில்லை என்றே நினைக்கிறேன். இதுவரை ஆடியதைவிட சிறப்பான பேட்டிங் என்னால் ஆடமுடியும். தோனியின் கேப்டன்சியில் நீண்டகாலம் ஆடியிருக்கிறேன். அவரது கேப்டன்சியில் ஆடுவது மிகப்பெரிய படிப்பினை. அவர் பேசுவதை கவனித்தாலே எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்றார் ரஹானே.