பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 

அந்த சுயசரிதையில் தனது உண்மையான வயதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அஃப்ரிடியின் கூற்றுப்படி அவரது அதிகாரப்பூர்வ வயதை விட 5 வயது அதிகம். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் 1980ம் ஆண்டு பிறந்ததாக உள்ளது. ஆனால் தனது சுயசரிதையில் 1975ம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்துள்ளார். 

அதுவே ஒரு சர்ச்சையாக வெடித்தது. அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டை கடந்தும் தனது நேரடி எதிரியாகவே பார்க்கும் காம்பீரையும் அஃப்ரிடி தாறுமாறாக விமர்சித்துள்ளார். காம்பீரின் கேரக்டரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். 

மேலும் 2003 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடாததற்கு அப்போதைய கேப்டன் வக்கார் யூனிஸ்தான் காரணம் என்று அஃப்ரிடி அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஃப்ரிடி, வக்கார் யூனிஸ் தலைமை பண்பு இல்லாதவர். அவரால் அணியை ஒருங்கிணைக்க முடியவில்லை. அதனால் தான் 2003 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை. அப்போது வாசிம் அக்ரம் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தௌகீர் ஜியாவின் ஆசியால் தான் வக்கார் யூனிஸ் கேப்டனாக வந்தார். வக்கார் ஒரு நல்ல கேப்டன் இல்லை என்றாலும் பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுகிறார் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.