வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி 1-1 என தொடரை சமன் செய்தது. 

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஒருநாள் தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது.

2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் எந்த வீரருமே ஒழுங்காக ஆடவில்லை.

வங்கதேச அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ந்து ஆட்டமிழந்ததால் அந்த அணியின் ஸ்கோர் வேகமெடுக்கவில்லை. அந்த அணியின் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். கேப்டன் மஹ்மதுல்லா 21 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் வங்கதேச அணி 115 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபரூக்கி மற்றும் அஸ்மதுல்லா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 116 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். 3ம் வரிசை வீரர் உஸ்மான் கனி பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் அடித்தார். ஹஸ்ரதுல்லா சேஸாய் 59 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ஆஃப்கானிஸ்தான் அணிக்காக போட்டியை முடித்து கொடுத்தார்.

இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என டி20 தொடரை சமன் செய்தது ஆஃப்கானிஸ்தான் அணி.