ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் ஆடிவருகின்றன. 

வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, 40 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அஸ்கர் ஆஃப்கானும் முகமது நபியும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 40 ரன்களில் அஸ்கர் ஆஃப்கான் அவுட்டாக, அதன்பின்னரும் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடிய முகமது நபி அரைசதம் அடித்தார். 

வங்கதேச பவுலிங்கை தாறுமாறாக அடித்து ஆடிய நபி, 54 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நபியின் அதிரடி அரைசதம் மற்றும் அஸ்கர் ஆஃப்கானின் பொறுப்பான பேட்டிங்கால், ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் அடித்தது. 

165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் மஹ்மதுல்லாவை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. மஹ்மதுல்லா மட்டுமே ஓரளவுக்கு ஆடி 44 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் வீழ்ந்தனர். முஜீபுர் ரஹ்மான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷீத் கான் மற்றும் குல்பாதின் நைப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

வங்கதேச அணி 139 ரன்களுக்கே ஆல் அவுட்டாகிவிட்டதால், ஆஃப்கானிஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 25 சர்வதேச டி20 போட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது. ரஷீத் கான் கேப்டன்சியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபாரமாக ஆடி பல மைல்கற்களை எட்டிவருகிறது.