ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. 

ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா, தான் ஐபிஎல் பார்ப்பதில் தனது நேரத்தை வீணடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கான், கொல்கத்தாவின் செல்லப்பிள்ளையான கங்குலியை அவமதித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கியது. ஐபிஎல் தொடங்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெக்கான் சார்ஜர்ஸ்(தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ்(டெல்லி கேபிடள்ஸ்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் இடம்பெற்றிருந்தன.

அந்தந்த அணிகளில் அந்த ஊர்களின் அடையாளமாக திகழ்ந்த வீரர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் தலைமையில் அணிகள் கட்டமைக்கப்பட்டன. அந்தவகையில், ஆர்சிபி அணியில் ராகுல் டிராவிட், மும்பை இந்தியன்ஸில் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கங்குலி, பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், டெல்லி டேர்டெவில்ஸில் சேவாக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சிஎஸ்கே, டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளில் இதுமாதிரி இல்லை.

அந்தவகையில், கேகேஆர் அணியின் கேப்டனாகவும் அந்த அணியின் அடையாளமாகவும் கங்குலி முதல் சீசனில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கங்குலி மிகச்சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய கிரிக்கெட்டை மறுகட்டமைப்பு செய்ததே கங்குலி தான். அவரது தலைமையில் தான் இந்திய கிரிக்கெட் சூதாட்டப்புகாருக்கு பிறகு மறுபிறவி எடுத்தது. கங்குலி மிகச்சிறந்த கேப்டன் தான் என்றாலும், ஐபிஎல்லில் அவரது தலைமையில் கேகேஆர் ஜொலிக்கவில்லை. 

2008ல் நடந்த முதல் சீசனில் ஆறாம் இடத்தையும், 2009ல் லீக் சுற்றின் முடிவில் கடைசி இடத்தையும், 2010 சீசனில் மறுபடியும் ஆறாம் இடத்தையும் கேகேஆர் பிடித்ததையடுத்து, கொல்கத்தாவின் அடையாளமாகவும் கிங்காகவும் திகழ்ந்த கங்குலியை கேகேஆர் அணி கழட்டிவிட்டது. அதன்பின்னர் புனே அணியில் ஆடிவிட்டு ஓய்வு பெற்றார்.

Also Read - ஐபிஎல்லில் 8 அணிகளில் ஆடிய ஒரே வீரர் யார் தெரியுமா..? தகர்க்க முடியாத சாதனையை தன்னகத்தே கொண்ட ஆஸி., வீரர்

இந்நிலையில், கேகேஆர் அணியை கட்டமைப்பதற்காக கங்குலியை பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவருக்கு தகுந்த மரியாதையை கொடுக்காமல் ஷாருக்கான் கழட்டிவிட்டதாக பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஜித், நான் ஐபிஎல் பார்ப்பதில் எனது நேரத்தை வீணடிப்பதில்லை. அதற்கு பதிலாக கல்லி கிரிக்கெட் ஆடுவதே எனக்கு அதிக மகிழ்ச்சியாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும். ஷாருக்கான் கேகேஆர் அணியை உருவாக்கிவிட்டு கங்குலியை கழட்டிவிட்டார். அணியை உருவாக்குவதற்காக மட்டுமே கங்குலியை ஷாருக் பயன்படுத்திக்கொண்டதையே இது காட்டுகிறது. கேப்டன் என்றால் யார், எப்படி செயல்பட வேண்டும் என்பதை கிரிக்கெட்டில் நமக்கு காட்டியவர் கங்குலி. ஆனால் அவரை முதலில் க்ரேக் சேப்பல், பின்னர் கிரன் மோர், அதன்பின்னர் ஷாருக்கான் ஆகியோர் அவமதித்தனர் என்று அபிஜித் விமர்சித்துள்ளார்.