Asianet News TamilAsianet News Tamil

இந்தியா தோற்கணும் என்பதற்காகவே கேவலமாக ஆடிய தோனி..! சர்ச்சையை கிளப்பிய முன்னாள் வீரர்

2019 உலக கோப்பையில் இங்கிலாந்திடம் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக பாகிஸ்தானின் சர்ச்சை வீரர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 
 

abdul razzaq again claims that india lost against england desperately in 2019 world cup
Author
Pakistan, First Published May 30, 2020, 4:08 PM IST

கடந்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடந்தது. பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே அந்த உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் வென்றது. 

இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. இறுதி போட்டியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய நிலையில், இங்கிலாந்து உலக கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. 

2019 உலக கோப்பையின் வலுவான அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் லீக் சுற்றில் மோதின. கோப்பையை வெல்ல அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியாவும் இங்கிலாந்தும் மோதிய போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எட்ஜ்பாஸ்டனில் நடந்தது. 

அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதம்(111) மற்றும் ஜேசன் ராயின் அதிரடி அரைசத்தால் செம தொடக்கம் அந்த அணிக்கு கிடைத்தது. அதை பயன்படுத்தி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸும் ஜோஸ் பட்லரும் அதிரடியாக ஆட, அந்த அணி 50 ஓவரில் 337 ரன்களை குவித்தது. 

abdul razzaq again claims that india lost against england desperately in 2019 world cup

338 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆனால் ரோஹித்தும் கோலியும் இணைந்து அருமையாக ஆடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிலைக்கு இட்டுச்சென்றனர். கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடித்து நன்றாக களத்தில் செட்டில் ஆகியிருந்த ரோஹித்தும் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் சென்றது. 

ரிஷப் பண்ட் அவுட்டானதற்கு பிறகு 40 ஓவரில் தோனி களத்திற்கு வந்தார். தோனி களத்திற்கு வந்த நேரத்தில் 11 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 112 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தோனி அந்த சூழலில் ஆடிய விதம் அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. தோனியின் ஆட்டத்தில் வெற்றிக்கான போராட்டமே தெரியவில்லை. அதிரடியாக ஆட வேண்டிய டெத் ஓவர்களில் சிங்கிள் எடுத்து நிதானமாக ஆடினார். அந்த போட்டியில் தோற்றாலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகியிருந்தது. ஏனெனில் அதற்கு முன் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால், அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகியிருந்தது. 

தோனியுடன் கடைசி சில ஓவர்களில் ஆடிய கேதர் ஜாதவும் மந்தமாகவே ஆடினார். அவர்களின் ஆட்டம் உண்மையாகவே அதிர்ச்சியளித்தது. ஆனால் இனிமேல், வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதால் கூட தோனி அப்படி ஆடியிருக்கலாம். ஆனால் தோனி அப்படியெல்லாம் நினைத்து ஆட்டத்தை விட்டுக்கொடுக்கும் வீரர் கிடையாது. கடைசி வரை போராடிப்பார்ப்பார். ஆனாலும் அந்த போட்டியில் அவரது மந்தமான இன்னிங்ஸ் புரியாத புதிர்தான். இந்திய அணி 50 ஓவரில் 306 ரன்கள் மட்டுமே அடிக்க, இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

abdul razzaq again claims that india lost against england desperately in 2019 world cup

அந்த போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தினால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும். ஆனால் இந்தியா தோற்றதால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. 

அந்த போட்டிக்கு முன்பே, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை இந்தியா விரும்பாது. எனவே இங்கிலாந்திடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது புத்தகத்தில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், அந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் தனக்கும் வியப்பை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார். 

இதையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான அப்துல் ரசாக், இப்போதும் சர்ச்சையாகவே பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அப்துல் ரசாக், இந்தியா வேண்டுமென்றே தான் தோற்றது என்பதில் சந்தேகமேயில்லை. அந்த சமயத்திலேயே நான் இந்த கருத்தை தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல; அனைவருமே இதைத்தான் கூறினர். பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அசால்ட்டாக அடிக்கக்கூடிய வீரர்(தோனி) தடுப்பாட்டம் ஆடினார். இந்தியா வேண்டுமென்றே தான் தோற்றது என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios