இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஆஃப் ஸ்பின்னர்கள் தான் கோலோச்சுகிறார்கள். 

அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் பேட்டிங்கிலும் அசத்துகின்றனர். அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்து சாதனைகளை படைத்துவருகிறார். ஜடேஜா பவுலிங்கில் அவருக்கு ஆதரவாக செயல்படுவதுடன் பேட்டிங்கிலும் அசத்துகிறார். 

இந்நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரில் யாருடைய பவுலிங்கை எதிர்கொள்வது கடினம் என ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச்சிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஃபின்ச், அஷ்வின் - ஜடேஜா ஆகிய இருவரது பவுலிங்கையும் எதிர்கொள்வது கடினம் தான். இருவரும் வெவ்வேறு வகையில் சவாலளிக்கும் பவுலர்கள். அஷ்வின் நிறைய வேரியேஷன்களுடன் பந்தை நன்றாக ஸ்பின் செய்வார். ஜடேஜா, பேட்ஸ்மேனின் தடுப்பாட்ட உத்திக்கு சவாலளித்து ஸ்டம்ப்பை கழட்டுவார் என்று ஃபின்ச் தெரிவித்துள்ளார்.