இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது. கடந்த 2018 சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. கடந்த முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஆடாத நிலையில், இந்த முறை அவர்கள் இருவரும் ஆடுவார்கள் என்பதுடன் மார்னஸ் லபுஷேன் என்ற மற்றொரு சிறந்த வீரரும் ஆஸ்திரேலிய அணியில் இருப்பதால், இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் கடும் சவாலாக இருக்கும். 

எனவே இந்திய அணியின் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி ஆடவுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான 30 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்திருந்தார். 

டெஸ்ட் அணியை பொறுத்தமட்டில் ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா, ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, குல்தீப், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய நிரந்தர டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்த கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் 3 விதமான போட்டிகளிலும் ஆட தகுந்தவர்கள் என்று அவர்களையும் டெஸ்ட் அணியில் எடுத்துள்ளார். ஆடும் லெவனில் இடம்பெறாவிட்டாலும், டெஸ்ட் அணியில் எப்போதும் எடுக்கப்படுகின்ற இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிப்மன் கில் ஆகிய இருவரையும் கூட ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயரை டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடியிருப்பதால் அவரை டெஸ்ட் அணியிலும் எடுக்க வேண்டும் என்று சோப்ரா தெரிவித்திருக்கிறார். அதேபோல இதுவரை டெஸ்ட் போட்டியில் ஆடிராத சாஹலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடத்தகுந்த வீரர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

அந்தவகையில், ஷ்ரேயாஸ் ஐயர், சாஹல் ஆகிய இருவருக்கு டெஸ்ட் போட்டியிலும் ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.