இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் என்ன நடக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்து கூறியுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (26ம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 60 ரன்கள் அடித்தார். புஜாரா ரன்னே அடிக்காமல் அவுட்டானார். கோலி 35 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடி சதமடித்தார் ராகுல். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்துவருவதால், 2வது செசனும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குமா என்பது சந்தேகம் தான்.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்திற்கு முன்பாக 2ம் நாள் ஆட்டத்தில் என்ன நடக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்து கூறியிருந்தார். இதுதொடர்பாக பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அடிக்கும். அஷ்வினும் ஷர்துலும் இணைந்து 40 ரன்களுக்கு மேல் அடிப்பார்கள். 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுவது இந்திய அணியின் துணிச்சலான முடிவு. இந்திய அணியிடம் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தக்கூடிய பவுலர்கள் இருக்கிறார்கள். 

ககிசோ ரபாடாவிற்கு முதல் நாள் சிறப்பானதாக இல்லை. 2ம் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்துவார் ரபாடா. தென்னாப்பிரிக்க பவுலர்கள் நிறைய விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால் 2ம் நாள் ஆட்டம் ரபாடாவுடையதாக இருக்கும். 2ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணியின் 4 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியிருக்கும். 2ம் நாள் ஆட்டத்தில் கண்டிஷன் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்திய பவுலர்கள், தென்னாப்பிரிக்க பவுலர்களை விட மிகச்சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

இது 2ம் நாள் ஆட்டம் முழுமைக்குமான கணிப்பு. ஆனால் 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.